கம்பன் காவிய சாரம்

கம்பனின் காப்பியக் கடலுள் மூழ்கி முத்துக் குளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் இந்நூலின் ஆசிரியர் திரு. எஸ். நல்லபெருமாள். கம்பனின் காப்பியக் கடலில் மூழ்கி முத்துக்குளிப்பதற்கும் நீலத் திரைக் கடலில் முத்துக் குளிப்பதற்கும் இடையே வேற்றுமைகள் பல உள. நீலக் கடலில் மூழ்குபவர்கள் மிக ஆழத்திற்குச் சென்றால்தான் முத்தைக் காணமுடியும். ஆனால் கம்பனின் காப்பியத்தில் இறங்கிவிட்டால் உடனேயே இன்பத்தையும் நயத்தையும் நுகர முடியும். நீலக் கடலில் முத்துக் குளிப்பது அபாயம் நிறைந்த பிழைப்பு.  கம்பனின் காப்பியக் கடலில் குளிப்பதோ இன்பவெள்ளத்தில் திளைப்பு. நீலக் கடலில் கண்டெடுக்கும் முத்தை ஓரளவுக்கு அணிந்து கொண்ட போதிலும் எஞ்சியவை விற்றுப் பணமாக்கத்தான் படுகிறது. கம்பனின் காப்பியத்தில் புகுந்து நுகரும் இன்பமோ நிலையானது; பிறருக்கு விலை வாங்காமல் பகிர்ந்தளிக்கக் கூடியது.