குறுந்தொகை

நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, என்னும் மூன்றும் பாவகையிலும் பிற திறங்களிலும் பெரிதும் ஒப்புமையுடையன. குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி: பேரெல்லை எட்டு அடி. நீண்ட பாடல்கள் அடங்கிய அகநானூற்றை ‘நெடுந்தொகை’ என்று குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல்-தொகுதி குறுந்தொகை என்று பெயர் பெறுவதாயிற்று. இந்த அடி அளவினாலும், வேறு சில ஏதுக்களாலும், எட்டுத் தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்டது இக் குறுந்தொகை எனத் துணிதற்கு இடமுண்டு.

எட்டுத் தொகை நூல்களின் பெயர்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பா இந் நூலை ‘நல்ல குறுந்தொகை’ என்று பாராட்டுகின்றது. பண்டைய உரையாசிரியர்கள் தத்தம் உரை நூல்களில் மேற்கோளாக இந் நூற் செய்யுட்களைப் பெரிதும் எடுத்தாண்டுள்ள னர். ‘இந் நூலுள் இப்பொழுது தெரிந்தவரையில் 165 செய்யுட்களே பிற நூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப் பெறாதவை’ என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் குறித்துள்ளார்கள்.