தொல்காப்பியத் திறன்

தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும்,பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் “தொல்காப்பியன்” எனப்பெயர் வைத்துக்கொண்டார். அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’ எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும்.

தொன்மைக் காலந்தொட்டு தமிழின் முதன்மை இலக்கணமாய் எழிலோடு விளங்கும் தொல்காப்பியம், வளரும் தமிழுக்கு வாழும் இலக்கணமாகும். இன்று தொல்காப்பியம் பல்வகை ஆய்வுகளைப் பெற்றுள்ளது. மொழியியல் கல்வியும் தொல்காப்பியத் தனிச் சிறப்புக் களை ஆராய்ந்து வெளியிட்டு வருகிறது. முப்பதாண்டு களாகத் தொல்காப்பியம் புதிய பார்வையில் புதிய விளக்கம் பெற்று வருகிறது. பேராசிரியர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் ‘தொல்காப்பியப் புதுமை’ எனும் ஆய்வு நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுப் பெருமை பெற்றது. இன்று பேராசிரியர் அவர்களின் *தொல்காப்பியத் திறன்’ எனும் இந்நூலை வெளியிடுவதில் பேருவகை கொள்கிறது.