புறநானுரு
புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட தொகுதி ஆதலின், இது ‘புறநானூறு’ என்று பெயர் பெற்றது. புறம், புறப்பாட்டு, புறம்புநானூறு, என்னும் பெயர்களாலும் இந்நூலை நச்சினார்க்கினியர் முதலியோர் குறித்துள்ளனர். இதில் அமைந்துள்ள அகவற் பாடல்களின் அடிச் சிறுமை பெருமை எல்லைகள் துணிய இயலாதபடி பாடல்கள் பலவும் சிதைந்துள்ளன. இதனைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பற்றிய செய்திகளும் அறியக்கூடவில்லை.
பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும், அறிவுறுத்தும் அரிய கருவூலமாக இத்தொகை நூல் உள்ளது. பண்டைக்காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், வீரவழிபாட்டு முறைகளையும், பல சமூகப் பழக்க வழக்கங்களையும், எடுத்தியம்பும் நோக்குடைய பாடல்களை இத்தொகுதி ஒன்றில்தான் நாம் பரக்கக் காண இயலும். இந்நூற் பாடல்கள் தோன்றிய காலம் ‘தமிழகத்தின் வீரயுகம்’ என்று சிறப்பித்துச் சொல்லத்தக்க பொற்காலமாகும்.
இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 400 பாடல்கள் உள்ளன. நூற்றைம்பது கலியுள் கடவுள் வாழ்த்தும் உட்பட்டிருத்தல் போல, புறப்பொருள் பற்றிய இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்தும் நூலின் அங்கமாய் அடங்கியுள்ளது. ஆராய்ச்சியாளரில் ஒரு சிலர் கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் இருந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றனர். இவற்றுள் 267, 268 ஆம் பாடல் கள் முற்றும் மறைந்து போயின. இப்பாடல்களுக்கு உரிய பழைய உரை கூடப் பிரதிகளில் காணப்பெறவில்லை. 266 ஆம் பாடலுக்கு மேற்பட்டுள்ள பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர், முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புக்களில் பெரும்பாலனவும். சிதைவுபட்டுள்ளன. இந்தச் சிதைந்த பகுதிகள் புள்ளி நிரை இட்டுப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இத்தொகை பாடிய புலவர் நூற்று ஐம்பத்து அறுவர் ஆவர்.
இதன்கண் அமைந்த செய்யுட்கள் ஏதோ ஒரு வகை இயைபு கருதி முறைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கும் வகையில் சில இயல்புகள் அங்கங்கே தென்படுகின்றன. எனினும், திட்டவட்டமாகக் கூற இயலவில்லை.


