சிலப்பதிகார யாப்பைதி

சிலப்பதிகார யாப்பமைதி ‘என்பது என் ஆய்பொருள். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பாடுபொருண்மை குறித்துப் பல கோணங்களில் ஆய்வுரைகள் பல தமிழுலகில் வெளிவந்துள. தொல்காப்பியர், காக்கைபாடினியார் முதலிய யாப்பிலக்கணிகள் வகுத்துத் தந்த வழித்தடத்தில், ஏறத் தாழ ஐயாயிரம் அடிகள் கொண்ட தனி மூல காப்பிய மொன்றின் யாப்பமைதியைப் பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாய்வு த மி ழ் ஆராய்ச்சியுலகில் கன்னிமுயற்சியாகும்.

இலக்கியத்தைத் திறன் செய்யும் நெறிகளைப் பலவாக வகுத்துரைப்பர் திறனாளிகள். கண்டுணர் திறனாய்வு நெறியும் (Inductive Criticism) அவற்றுள் ஒன்று. ‘கண்டுணர் முறை முன்னமே வகுத்த விதிகளைக் கொண்டு ஆய்வதன்று; ஒரு நூலைக் கற்கும்போது அதிலிருந்தே விதிகளைக் கொண்டுணர்ந்து ஆய்வதாகும்’1 என இந்நெறியை விளக்குவர் அறிஞர், இந்நெறிப்படி சிலப்பதிகாரக் காப்பிய அமைப்பினின்றே யாப்பியல் விதிமுறைகளை அளவு கோலாகக் கொண்டு, நூலின் யாப்பமைதி, இக் கட்டுரைக்கண் ஆயப்பெற்றிருத்தலைக் காணலாம். வேற்று மொழி இலக்கியங்களைக் கற்று அதனால் அறியப்படும் விதிமுறைகளை அளவுகோலாகக் கொண்டு தமிழிலக் கியங்களை ஆயும் நெறியிலன்றி, தமிழ் யாப்பியலார் வகுத்த இலக்கணச் சட்டங்களாய களத்தில் நின்று, எடுத்துக்கொண்ட காப்பியத்தின் யாப்பு என்னும் அளவு கோலால், யாப்பியல் என்ற முழு நோக்கில் எழுத்தும் அசையும் சீரும் தளையும் பாவும் பொருளும் எண்ணிச் செய்யப்பட்ட இவ்வாய்வுரை தனித் தன்மையுடையது.

உரையாசிரியர்களும் பதிப்பாசிரியர்களும்

சிலப்பதிகார யாப்பமைதி பற்றிய ஆய்வுக்கு அடித் தளம் அமைத்துச் சென்றோர் பலர். அரும்பதவுரை யாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவரும் சிலப்பதிகாரத்தின் யாப்பு வகையைச் சுட்டிய முன்னோடியர் காப்பியத்தின் பகுதிகளனைத்திற்கும் விரிவான யாப்பு வகையைச் சுட்டாவிடினும் சிற்சிலப் பகுதிகளுக்கு நுட்பமான யாப்புக் குறிப்புக்களை உரைத்த பெருமையர் அரும்பதவுரைகாரர். அடியார்க்கு நல்லார், காதையின் இறுதிதோறும் ‘எல்லா வடியும் நேரடியாய் வந்து முடிதலின், நிலைமண்டிலவாசிரியப்பா’ என்பது போன்று அவ்வப்பகுதிக்குரிய யாப்பு வகையைச் சுட்டிச் செல்லும் சிறப்பினர். கானல்வரிக்கும் வழக்குரைகாதை முதலாய பிற்பகுதிகட்கும் அடியார்க்கு நல்லார் உரையின்மையால், சிலவற்றுக்கு அவரது யாப்புச் சுட்டை அறிதற்கு வாய்ப்பில்லை.