யோகமும் போகமும்
ஆன்மீக வளர்ச்சிக்கு விஞ்ஞானம் தடையில்லை ஆன்மீக வாழ்க்கையை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் நடத்தும் காலகட்டத்தில், நாம் வாழ்கிறோம். விஞ்ஞானநெறி சார்ந்த ஆன்மிக வாழ்க்கைதான் பொருளுடையது.
அந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டபடி நடக்கவும், ஒரே வழிதான் உண்டு. அந்த வழி தவயோக வழியாகும். தவயோகப் பயிற்சி தானாக வருவதில்லை; குருவாயிலாகத் தீட்சை பெற்றால்தான் தவயோகப் பயிற்சி கைகூடும். இதைத்தான். தமது நாட்டில், பழமொழியாக “தொட்டுக் காட்டினால் ஒழியச் சுட்டுப் போட்டாலும் வராது” என வழங்குகிறோம்.
தவயோகப் பயிற்சியின் முதற்படி ஒருமுகச் சிந்தனை. இதனை நெற்றிக்கண் வாயிலாகப் பெறமுடியும். நினைவை உறுதி ஆக்கி, மேற்செலுத்தி, உச்சிக்கண் காணும் தியானமே இரண்டாம் நிலை. இந்த இருநிலைப் பயிற்சியின் தொடர்பாக வருவதே தவயோகக் கனலின் கனிந்த நிலை. இந்த நிலை பேருணர்வாம் அகிலத் துடிப்புடன் நம்மை இனைக்கும். இது மூன்றாம் நிலை. இந்த மூன்று நிலைகளைத், தவயோக முறையினர் Concentration, Meditation, Contemplation என்பர். நெற்றிக்கண், உச்சிக்கண், அகிலக்கண் என்ற முக்கண்ணாக நாம் இதனைக் கொள்ளலாம். நெற்றிக்கண் திறந்தால், நினைப்பிலே ஒருமுகச் சிந்தனை வருகிறது. உச்சிக்கண் திறந்தால், நினைப்பின் ஆழத்தே தோய்ந்து, அடிமனம் வரையிலே காணமுடிகிறது. அகிலக்கண் திறந்தால், இடமும் காலமும் கடந்து காணும் தெளிவு பிறக்கும். இதை வடமொழியில் – தாரணை, தியானம், சமாதி என்று பதஞ்சலியோக சூத்திரம் கூறும்.
இந்த மூன்றாம்நிலைப் பயிற்சி தோய்ந்து ஓங்கிடும் நிலையிலே, ‘நான்’ என்னும் பிணிப்பு தானே சுழலுகிறது. ஆன்மீக மலர்ச்சிக்கு, இந்த ‘நான்’ கழிவு மிகவும் இன்றியமையாதது.’நான்’ செத்த நிலையில் பிறக்கும் ஆன்மிக மலர்ச்சியிலே. அளவிறந்த அமைதியாம் கொலுவிலே அமர்வதுடன், எல்லையற்ற ஆற்றலின் இருப்பிடமாகவும் ‘ஆன்மா’ ஒளிர்கின்றது.
இத்தகைய ஒளிப்பெரு நிலையிலே ஆன்மா மலரு மாயின், பல்லாண்டு பல்லாண்டுக் காலம் உலகம் பயன் பெற்று, உலகம் பயன்பெற வாழ்கின்ற சீரிய சிறந்த வாழ்வு தோன்றும். அங்கே ‘நான்’ இல்லை; யாவுமாய்ப் பரவிய ‘நாம்’இருப்போம்.


