உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண குமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 369 பாடல்களைக் கொண்ட உதயண குமார காவியம் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. பெருங்கதை என்னும் சமணக் காப்பியத்தின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.