நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.