நான்மணிமாலை

நான்மணிமாலை என்பது நான்கு வகைப்பட்ட மணிகளை முறையே தொடுத்து அமைக்கும் மாலை போன்று வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்னும் நான்குவகைப் பாக்களும் முறையே அமையுமாறு நாற்பது பாக்களால்பாடி அமைக்கப்பெறும் ஒரு நூலாகும்.

நான்மணிமாலை எனப் பல புலவர் பெருமக்களால் அவ்வப்போது பாடியருளப்பெற்ற நூல்கள் சில உள்ளன. அவைகளுள் கோயில் நான்மணி மாலை, திருவாரூர் நான் மணிமாலை, பழனி நான்மணிமாலை, நால்வர் நான்மணிமாலை என்பன மிகச் சிறந்த நூல்களாகும்.

இந்நான்கனுள்ளும் முதலில் குறித்துள்ள மூன்றும் இறைவனியல்பையும், அடியவர்களுக்கு அவன் அருளிய அருட்செயல்களையும், திருக்கோயில்கொண்டு எழுந் தருளியிருக்கும் ஊர்களின் மாண்புகளையும், இவை போல்வன பிறவற்றையும், ஆசிரியர் இறைவனபால் வேண்டுவனவற்றையும், மன்னுயிர்க்கு இறைவழிபாடு இன்றியமையாதது என்பதையும் நன்கு விளக்கிக் கூறுவன வாகும். அவைகளின் சொல்நயமும், பொருள் நயமும் பயிலும்தோறும் புதிய புதிய இன்பங்களைப் பயப்பன ஆகும்.