தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
அல்கா விழுப்பஞ்சேர் தொல்காப்பியம், ஒல்காப்பெரும் புகழ்த் தமிழ் முனிவரர் தொல்காப்பியனாரால் செய்தருளப்பெற்றது. இஃது, எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டம். இம்மூன்றினையும் தொன்மை நல்லிசைச் சான்றோர் ‘எழுத்துப்பால், சொற்பால், பொருட்பால், என வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. இவ்வுண்மை இறையனார் களவியலுரையுள் ( ருசு. திணையே கைகோள்) ‘தொல்காப்பியனார் பொருட்பால் உள்ளும் கண்டுகொள்க’ என நக்கீரனார் உரைக்கும் நல்லுரையால் விளங்கும். இது, திருவள்ளுவநாயனார் அருளிய தமிழ்ப் பொதுமறையாம் திருக்குறளுக்கு அமைந்துள்ள அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் பகுதிகளோடு ஒருங்கொத்துத் திகழ்வது காண்க. இப்பொழுது அதிகாரம் என வழங்கப்படுகின்றது.
இந்நூல் இப்பொழுது உலகிடைநிலவும் எல்லாத்தொன்மை மொழிகட்கும் காலத்தாலும், சீரமைப்பாலும் மிகமிக முந்தியதென்பது நடுநிலை அறிஞர் பல்லோர் கண்டு நவின்ற நன்முடிபாகும். இது மொழியமைதியை வரம்புபடுத்தி வனப்புறச் செய்யும் கருவி நூலாகும். அம்மட்டோடும் அமையாது உறையும் நிலமும், உதவும் பருவமும், இயக்கும் இயவுளும், உண்ணும் உணாவும், உஞற்றும் உழைப்பும், எண்ணும் இசையும், எய்தும் நண்பும் பிறவும் இனிதாய் அமையும் பான்மையும், இவற்றால் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் விழுப்பமுற்று ஒழுக்கநெறி வாழும் அறப்பாங்கும், அவ்வறந்தலை நின்றார் மெலியாரை வலியார் நலியவொட்டாது புறந்தரும் போற்றருங் கடமையும் முறையே பொருட்பாலில் அகம் புறம் என்னும் இருபெருந் தலைப்பால் விளக்கியருளுகின்றனர். மேலும், களவு, கற்பென்னும் ஒழுகலாறுகளால் காதலர்கள் திருவருளால் துணை கையேற்றலும், சேர்ந்து தொண்டியற்றலும் ஆகிய சான்றாண்மையை வலியுறுத்தும் அரும்பெருந் தமிழ்ப் பண்பாட்டியலும் தொல்லியல் வழாது நல்லறிவு நாளும் பெருகி நாடு நலமுற விளக்கியருளினர்.


