ஒரு குடும்பம் துன்பக் கடலில் அழுந்திக் கரை காணாமல் இருப்பது; துன்பக் கடலின் ஆழமே இயல்பான வாழ்விடம் என்றும் கருதுவது. மற்றொரு குடும்பம் மேற்புறத்தே மிதந்து துன்ப அலைகளால் அலைந்து அலைந்து கலங்குவது: கரைசேர வழி இல்லையோ என்று ஏங்குவது. இன்னொரு குடும்பம் கரையோரம் நின்று காப்பாற்ற வழி அறியாமல் கவலைப்படுவது; அந்தக் குடும்பத் தலைவன் முயற்சி எல்லாம் எண்ணும் அளவில் – கனவு காணும் அளவில் – வளர்ந்திடக் காண்கின்றோம்.
குடும்ப நிலைக்கு ஏற்றவாறு, அவரவர்க்கு அமைந்த தொழில்களும் வெவ்வேறு: ஆங்காங்கு உள்ள தாயரும் மூவகையாக உள்ளனர்; குழந்தைகளும் கவளர்ப்பு முறையில் இருக்கின்றனர், மூவகை வாழ்க்கையிலும் துன்பம் உள்ளது: தீராக்குறை உள்ளது. இவை தீர மருந்து உண்டா? கலைஞர் கனவு, தொண்டர் தொண்டு, அறிஞர் அறிவு, இளைஞர் இயக்கம் – எல்லாம் இயற்றைத் தீர்க்கவே முயல்கின்றன.
இந்த நூலில் நனவும் உள்ளது: கனவும் உள்ளது, நனவு நிகழ்காலம், கனவு எதிர்காலம். நனவு கனவு என்பவற்றை மறந்து நோயும் மருந்துமாகக் காணலாம். நோய்கள் எல்லோருக்கும் அனுபவமாகத் தெரிந்தவை. மருந்துகளோ எண்ணத்தால் உண்ணத்தக்கவை. இந்த நோய்களை இந்த மருந்துகள் தீர்க்குமா என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். இவ்வாறு எண்ணிப் பார்த்தலே நமக்கும் நன்மை: நாட்டுக்கும் நன்மை