கலித்தொகை

எட்டுத் தொகை நூல்களுள் பாவின் பெயரைப் பெற்ற தொகை நூல்கள் பரிபாடலும் கலித்தொகையும். அகன் ஐந்திணையாகிய அகப்பொருட் செய்திகளைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாவாக இவ் இரண்டினையும் தொல்காப்பியர் குறித் துள்ளனர்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர்

(அகத். 53)

என்பது தொல்காப்பியரது வாக்கு. இச்சூத்திரத்தில் ‘என்மனார் புலவர்’ என்று குறிப்பதனால், ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேயே அகப்பொருள் இலக்கிய வழக்கில் பரிபாடலும் கலியும் முதன்மை பெற்று விளங்கின என்பது புலனாம்.

 பா அமைப்பிலும் பரிபாடலும் கலியும் பெரிதும் ஒப்புமை உடையன.  இவ் இரண்டையும் வெண்பா நடைத்து எனத் தொல் காப்பியர் கூறுவர். கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து, என்னும் உறுப்புக்கள் இவ் இரண்டு பாவிற்கும் பொதுமையானவை. மேலும், இவ் இரண்டையும் இசைப்பாட்டு எனவும் உரையாசிரியர் முதலியோர் குறித்துள்ளனர்.  இவ்வகை ஒப்புமைகளால் இவற்றை வேறுபடுத்துக் கண்டு கொள்ளுதல் அத்தனை எளிதன்று. ‘பரிபாடல் பரிந்து வருவது; அஃதாவது, கவி யுறுப்புப் போலாது பல அடியும் ஏற்று வருவது’ (செய்யு 118) எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இவ் இரண்டு பாடல்களின் வேற்றுமைத் தன்மையை ஒருவாறு புலப்படுத்தும்.

சங்கத்தார் தொகுத்த கலிப் பாட்டு நூற்றைம்பது எனப் பேரா சிரியரும் (செய்யு. 149, 153, 154, 155, 160), இறையனார் அகப் பொருள் உரையாசிரியரும் (சூ.1) குறித்துள்ளனர். ஏனைய தொகை நூல்களிற் போலப் பாடல்களில் சிதைவும் குறைவும் இன்றி, கலி நூற்றைம்பதும் இப்பொழுதும் வழங்குவது தமிழ் மக்களின் தவப்பயன் எனலாம்.

நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள் வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன. ໙ ພ 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள் ளன. இப் பகுதிகளை மருதக் கலி (செய்யு. 135), முல்லைக் கவி (செய்யு. 156). என வழங்கியதோடு மருதப் பாட்டு (செய்யு. 160). முல்லைப் பாட்டு (செய்யு. 154, 185). குறிஞ்சிப் பாட்டு (செய்யு. 160). எனவும் பேராசிரியர் தமது உரையில் வழங்கியுள்ளனர்.