பத்துப்பாட்டு

பழந் தமிழ் நூல்களைப் பொதுவாக, ‘பத்துப் பாட்டு’, ‘எட்டுத் தொகை’, ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்று பாகுபடுத்தி உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப் பயின்றுவரும் ஒரு மரபாகும். ‘தமிழ் விடு தூதின்’ ஆசிரியர்,

மூத்தோர்கள்

பாடியருள் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும், கேடு இல் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்

என்று குறிப்பிடுதலும் இம் மரபைப் புலப்படுத்தும். இம் முறை வைப்பில் ‘பத்துப் பாட்டு’ சங்க காலத் தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது. இது பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. நீண்ட அகவற் பாடலுக்கு உதாரணமாக, இளம்பூரணர் பத்துப் பாட்டுப் பாடல்களையும் குறித்துள்ளார்.  ‘பெரிய பாட்டு பத்துப் பாட்டினுள்ளும்,  சிலப்பதிகாரத்துள்ளும், மணிமேகலையுள்ளும் கண்டு கொள்க’ (தொல். செய்யு.150) என்பது அவரது வாக்கு.

பத்துப் பாட்டின் ஏட்டுப் பிரதிகளில் குறிக்கப்பெற்றுள்ள பாடல் ஒன்று இத் தொகுதியில் அடங்கிய பாடல்களை முறைப்படுத்திக் கூறுகின்றது.  அப்பாட்டு வருமாறு:

முருகு, பொருநாறு, பாண் இரண்டு, முல்லை,

பெருகு வள மதுரைக் காஞ்சி, மருவினிய

கோல நெடுநல்வாடை, கோல் குறிஞ்சி,பட்டினப்

பாலை, கடாத்தொடும், பத்து.

இப் பாடலில் குறித்த வரிசையிலேயே பல பிரதிகளிலும் பாடல்கள் அமைந்திருந்தன. அன்றியும், முதலாவது, இரண்டாவது, என எண்ணுப் பெயராலும் இவை குறிக்கப்பெற்றுள்ளன.

எனினும், ‘பத்துப் பாட்டு’ எனக் குறிக்கும் வழக்கம் மிக முற்பட்டது என்று கொள்ளுவதற்கு இல்லை. இப் பெயரை இளம்பூரணரும், மயிலைநாதருமே (நன்.387). தத்தம் உரைகளில் குறித்துள்ளனர். பேராசிரியரோ தமது தொல்காப்பிய உரையில் ‘பாட்டு’ என்றே (செய்யு. 50. 80 உரை) வழங்கியுள்ளனர். இளம்பூரணரும் பிற உரையாசிரியர்களும் பத்துப் பாட்டுப் பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டும்பொழுது, அவ் வவற்றின் தனிப் பெயராலேயே குறித்துள்ளார்கள். எட்டுத்தொகை நூற்களிற்போல இத்தொகுதியைத் தொகுத்தார். தொகுப்பித்தார் பற்றிய குறிப்புக்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. கடைச் சங்க வரலாறு கூறுமிடத்து, எட்டுத் தொகை நூல்களை முறையாக எடுத்து விளக்கும் இறையனாரகப் பொருள் உரையில் (சூ .1) பத்துப் பாட்டைப் பற்றிய செய்தி எதுவும் காணப் பெறவில்லை.

பிற்காலத்திலே எழுந்த பன்னிரு பாட்டியலில் ‘பத்துப் பாட்டு’ என்னும் நூலின் இயல்பு குறித்து இரண்டு சூத்திரங்கள் உள்ளன.

நூறு அடிச் சிறுமை, நூற்றுப் பத்து அளவே.

ஏறிய அடியின் ஈர்-ஐம் பாட்டுத்

தொகுப்பது பத்துப் பாட்டு எனப்படுமே.(384)

அதுவே, அகவலின் வரும் என அறைகுவர் புலவர். (385)

இந்தச் சூத்திரங்கள் ‘பத்துப் பாட்டு’ என்னும் வழக்குப் பெருகிய காலத்தில் இயற்றப் பெற்றவை. ‘பத்துப் பாட்டு’ இலக்கியத்தை நோக்கி வகுக்கப்பெற்றதே இந்த இலக்கணம். வேறு வகையான பத்துப் பாட்டுக்கள் தமிழுலகில் இல்லை.

பத்துப் பாட்டு நூல் பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு கோவையாயினும், ‘குறுந்தொகை’, ‘புற நானூறு’ போன்ற நூற் கோவை யன்று. இவை ஒன்றற்கு ஒன்று தொடர்பு இன்றி, வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு காலத்தில், எழுந்த பாட்டுக்கள்.