அகநானுறு

அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே ஆயினும். எட்டுத்தொகை நூல்களுள் ‘அகம்’ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந் தொகை நானூறு ….’ என இந் நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.

அகவற் பாவில் அமைந்த ஏனைய நூல்களிலும் இதன்கண் அமைந்த பாடல்கள் அடி அளவால் மிகவும் நீண்டவை. இப் பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டவை எனவே, இதனை ‘நெடுந்தொகை’ எனவும் வழங்குவர்.

அகநானூறு எட்டுத்தொகை  எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, ‘நெடுந்தொகை’ என்றும் கூறுவர்.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் உள்ளன. இந்த நானூறு பாடல்களும் களிற்றியானை நிரை (1-120), மணி மிடை பவளம் (121-300). நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இதன்கண் உள்ள பாடல்கள் தக்கதொரு நியமத்தை மேற்கொண்டு அமைந்துள்ளன. ஒற்றைப்பட்ட எண்களையுடைய பாடல்கள் (1, 3, 5, 7, 9, 11 முதலியவை) பாலைத் திணை பற்றியனவாகும். 2, 8, 12, 18 என்று இவ்வாறு இரண்டும் எட்டுமாக வரும் எண்கள் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களாக உள்ளன. 4, 14, 24 என்று இவ்வாறுள்ள நான்காம் எண்கள் முல்லைத் திணைக்கு உரியன. 6, 16, 26, 36 என்று இவ்வாறு ஆறாவது எண்ணாக உள்ளவை மருதத் திணை பற்றிய பாடல்களாகும். 10, 20, 30 என்று இவ்வாறு வரும் பத்துப் பத்தான எண்கள் நெய்தல் திணைக்கு உரியனவாம். இவ்வகையான முறையில் ஐந்திணை அமைப்பு தொகை நூல்களில் இந்நூலுக்கு மட்டும் அமைந்திருத்தலும் சிந்தித்தற்குரியது.  தாம் தொகுத்த தொகைநூல் என்றும் மறையாது தமிழர்பால் நிலைக்க, இதன் தொகுப்பாசிரியர் மேற்கொண்ட செய்யுள் வைப்புமுறை பெரிதும் பாராட்டற்கு உரியதாகும்.

அகநானூற்றைத் தொகுத்தவர், உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்து உதவியவன், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இப்பாண்டியனின் செய்யுள், மருதத்திற்குரிய 26ஆம் செய்யுளான இந்நூலுள் விளங்குதலைக் காணலாம் ; இதனால், இவனும் தமிழறிந்த பெரும் புலமையாளன் என்பது விளங்கும்.