தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண  நூலாகும். இஃது இலக்கிய  வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர்  தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.  பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன. தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து. பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும். தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல். தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்) = தொல்காப்பியம். (பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது “தொல்காப்பியம்” என்று அழைக்கப்படுகின்றது.

தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும், பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் “தொல்காப்பியன்” எனப்பெயர் வைத்துக்கொண்டார். அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’ எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும்.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும் தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும் பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் கருத்தா இன்றி காரியமில்லை அதனால் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.